Sunday

லிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா?

லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.
 
அதற்கும் முன்பாக சென்ற வருட அக்டோபர் மாத வாக்கிலேயே லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான் மற்றும் ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள்
  எண்ணை துரப்பணத்திற்காகவும் புதிய எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றிருந்த லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை. அப்போதே ரசிய ஊடகங்கள் லிபியாவின் மேல் மேற்கத்திய நாடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றைத் துவங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி எழுதத் துவங்கிவிட்டன.


 
லிபியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்தின் வழியே நவீன ஆயுதங்களும் வெடி பொருட்களும் கடந்த மாதத் துவக்கத்திலிருந்தே போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. யுகோஸ்லோவிய விவகாரத்தில் கையாண்ட அதே போன்ற தந்திரத்தை லிபியாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம் என்று மேற்கத்திய நாடுகள்
  நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் கடாஃபியின் இராணுவம் தொடுத்த எதிர்த் தாக்குதல்கள் ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது. மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய லிபிய இராணுவ நடவடிக்கையின் விளைவாய் கலக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரங்களை இராணுவம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.


 

உடனடியாக தனது ஊதுகுழலாக செயல்படும் சர்வதேச ஊடகங்கள் மூலம் லிபியாவில் படுபயங்கரமான இனப்படுகொலை நடப்பதாக பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி
  வழிப் போராட்டம் என்பது போன்றும் அதை கடாஃபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என்பது போன்றும் ஒரு சித்திரம் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து “மனிதாபிமானத்தின்” அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.


 
பொதுவில் நீண்ட நாட்களாக மக்களுக்கான ஜனநாயகத்தை கடாஃபி மறுத்து வந்துள்ளார். மொத்த நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவரது குடும்பமே கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் மன்னர்களுக்கும் கடாஃபிக்கும் இந்த அம்சங்களில் பெரும் ஒற்றுமை
  இருந்தது உண்மை தான். ஆனால், அடிப்படையில் வேறு ஒரு முக்கியமான அம்சத்தில் கடாஃபி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார் – அது தன் தேசத்தின் வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தது தான்.


 
ஜனநாயகக் கோரிக்கை லிபியாவில் ஓரளவுக்கு இருந்து வந்தது என்பதும், மக்களில் ஒரு பிரிவினர் கடாஃபியின் மேலான நம்பிக்கையை இழந்திருந்தனர் என்பதும் உண்மை தான். ஆனால், துனீசியா, எகிப்து உள்ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்லாது லிபியாவில் பெருமளவிலான மக்கள் போராட்டங்களோ எதிர்ப்புகளோ உருவாகிவிடவில்லை. ஆக, தற்போது லிபியாவின் ‘ஜனநாயகத்துக்காகப்’ போராடிவரும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணியின்’ (National Front for the salvation of Libya) வரலாறு என்னவென்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதிலும் மிகக் குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தை ஏகாதிபத்திய
 நாடுகள் உடனடியாகப் பிரித்து எதிர்ப்பாளர்களை அங்கீகரிக்க காட்டிவரும் அக்கறையும் கவனத்திற்குரியது.

1983-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகிய அமைப்புகளின் நேரடி ஏற்பாட்டில்
 ‘ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’ (National Endowment for Democracy) எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராணுவ பலத்தோடு ஜனநாயகத்தை உருவாக்க முடியாத பிராந்தியங்களில் செயல்படுவதற்கென்று உருவாக்கப் பட்ட இவ்வமைப்பின் நோக்கம்
 – தமக்கு ஒத்துவராத சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில் ஊடுறுவி, மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை விதைப்பதே. அவ்வகையில் இவ்வமைப்பு எண்பதுகளில் இருந்தே லிபியர்கள் மத்தியில் ஒரு நீண்ட கால
 நோக்குடன் கடாஃபிக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்திருந்தது.


மேற்படி அமைப்பின் தீவிர ஆசியைப் பெற்றது தான் தற்போது அப்பாவிப் புரட்சியாளர்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் போற்றிப் புகழும் ‘லிபிய
 விடுதலைக்கான தேசிய முன்னணி’. இந்த அப்பாவிகள் தமது பிறப்பிலேயே அமெரிக்க அடிவருடித்தனத்தைக் கொண்டிருந்தனர். 1981-ஆம் ஆண்டு சூடானின் அமெரிக்கக் பொம்மை சர்வாதிகாரியாக இருந்த கலோனல் ஜாஃபர் நிமிரியின் முன்னிலையில் தான் இந்த அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளின் ஏற்பாட்டில் 2005-ஆம் ஆண்டு லண்டனிலும் பின்னர் ஜூலை 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது.

No comments: