Monday


ஆசிய நாடுகள் என்றாலே இந்தியா – இலங்கை – பாகிஸ்தான் என இங்கிருப்பதைப் போல லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றால் பெரு – பிரேசில் – மெக்ஸிகோ - என பலவற்றைச் சொல்லலாம். அவற்றுள் ஓர் அரிய தேசம்தான் அர்ஜன்டைனா. அங்குதான் குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்டது.
ஆம், அதுதான் அவன் பிறந்த மண்.
அப்போது நாள்காட்டி ஜுன் 14 – 1928 என்று அறிவித்தது.
அவன் வளர்ந்த பொழுதுகளை அருகிருந்து ரசித்தவர்கள் குறும்புக்கு இன்னொரு பெயரும் குவேரா தான் என்று அடித்துச் சொல்வார்கள்.
அவன் வளர வளர குறும்போடு சேர்ந்து கூடவே வளர்ந்தது அவனது அறிவு மட்டுமில்லை அளவிடற்கரிய அவனது மனிதநேயமும்.
ரப்பர் மிதவைகளைத் தூக்கி ஆற்றில் போடுவான். தாவிக் குதித்த பிறகு தொடங்கும் அவனது பயணம் 100 – 150 மைல்கள் என. பத்து பதினைந்து நாட்கள் கழித்தே வீடு வந்து சேருவான்.
இன்றோ… நாளையோ… இறுதி மூச்சையும் விட்டுவிடும் அந்த லுானா… அதையும் விடமாட்டான். அதில் ஏறிக்கொண்டு ஐநூறோ அறுநூறோ மைல்கள் பயணம் செய்த பிறகே அவன் மனம் அமைதிப்படும். போகிற வழியெல்லாம் தென்படும் மக்களது வாழ்க்கை முறைகளையும், அவர்கள் சுமந்த கணக்கிலடங்கா சோகங்களையும் கணக்கிட்டுக் கொண்டே வீடு திரும்புவான்.
அந்த அர்ஜன்டைனா நாடு அவனையும் ஒரு மருத்துவனென்று சான்றளித்தபோது நாட்காட்டி மார்ச் 7, 1953 என்று அறிவித்தது.
மருத்துவரென்றால் பத்தாவது பெயிலாகிவிட்டு போலிப்பத்திரம் தயாரித்து வாழ்ந்த மருத்துவனல்ல.
மருத்துவரென்றால்…
‘எக்ஸ்ரேவுக்கு இத்தனையாகும்,
ஸ்கேனிங்குக்கு அத்தனையாகும்
எல்லாம் சேர்த்து மொத்தம் உன் சொத்தில் பாதி கட்டணமாகும்’ என உயிர்வாங்கும் மருத்துவனல்ல.
அவன் உயிர் கொடுக்கும் மருத்துவனாகவே மலர்ந்தான்.
மருந்துப்பைகளைத் தனது தோளில் சுமந்தபடி கொலம்பியா, வெனிசுலா எனும் துார தேசங்களிலிருந்த தொழுநோயாளிகளின் குடியிருப்புகளைத் தேடிச் சென்றான் மருத்துவம் பார்க்க.
கடமைக்கும், வியாபாரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த மருத்துவன் அவன்.
இப்படிப் பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்பட்ட குவேரா மெக்ஸிகோ நாடு வந்து சேர்ந்தபோதுதான் எதிர்காலம் அவன் எதிர்பாராத வேலைகளை அவனுக்காக வைத்துக் கொண்டு காத்திருப்பது புரிய வந்தது. அவன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பல்வேறு சம்பவங்கள் சங்கமித்த மண்தான் மெக்ஸிகோ.
அங்குதான் அவன் நாற்பதாண்டுகளாய் நகர்த்த முடியாத நாயகனாய் கியூபா நாட்டின் பிரதமராகவும், புரட்சியின் பிதாமகராகவும் வீற்றிருக்கிற பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தான்.
அப்போது நாட்காட்டி ஜுலை 14, 1955 என்று அறிவித்தது.
மருத்துவராய் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட குவேராவும் புரட்சியாளனாய் கியூபா நாட்டிலிருந்து வெளியேறிய பிடல் காஸ்ட்ரோவும் மெக்ஸிகோ நாட்டில் தான் அறிமுகமாகிறார்கள்.
விடிய விடிய நடக்கிறது விவாதங்கள்.
ஆனால், விடிந்த பிறகே விளங்குகிறது பிடலுக்கு… அந்த 27 வயது மருத்துவனும் கியூபா நாட்டு விடுதலைக்காக
வீர சபதமேற்று தன்னோடு பயணப்பட்டுவிட்டான் என்பது.
கப்பலில் பயணப்பட்டவர்கள் கரை இறங்கியபோது எதிர்கொண்டு அழைத்தது ஏவுகணைகளும்
எதிரிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும்தான்.
தப்பித் பிழைத்த அவர்களை தாவி அணைத்துக் கொள்கிறது கியூபக்காடுகளும் மலை முகடுகளும்.
அப்போதுதான் ‘இனி தன் தோள்கள் சுமக்க வேண்டியது மருந்துப் பையை அல்ல. படைகளைச் சிதற அடிக்கும் துப்பாக்கியை’ என உணர்கிறான்.
படை மருத்துவன் படைத் தளபதியாய் பரிணாமம் பெற்ற நாற்பத்தி எட்டே மாதங்களில் பறந்தோடுகிறான் எதிரி.
விடுதலை கீதம் கியூப மண்ணில் இசைப்படும்போது…
பிப்ரவரி 16, 1959 என்று அறிவிக்கிறது நாட்காட்டி…
பிரதமராகிறார் பிடல்.
எந்த நாட்டிலோ பிறந்து இந்த நாட்டுக்காக உழைத்த அந்த இளைஞனுக்கு நன்றி செலுத்துகிறது நாடே. அவனை வாழ்த்தும் விதமாக கியூபா மக்கள் சே என்று செல்லப் பெயர் சூட்டி குதூகலிக்கிறார்கள்.
குவேரா எனும் பெயரோடு ‘சே’வும் சேர்ந்து கொள்ள சேகுவேரா என புதுப்பெயர் பெறுகிறான் அந்த இளைஞன்.
அந்நிய மண்ணில் பிறந்திருந்தாலும்
தங்களுடையதை கண்ணியமிக்க மண்ணாக்கிக் காட்டிய இளைஞனை கியூப நாட்டினுடைய தேசிய வங்கியின் தலைவராக்குகின்றனர்.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ருபாய் நோட்டுக்களில் ‘சே’ எனும் தனது செல்லப் பெயரை கையெழுத்தாக இடுகிறார் சேகுவேரா.
அடுத்து அந்நாட்டின் தொழில்துறை தலைவராக்குகின்றனர் குவேராவை.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
புதிய பொறுப்பேற்றுக் கொண்டவுடன் உள்ளுர் தொழில்களை ஊக்குவிக்கும் முகமாக அந்நிய நாட்டு கொள்ளை நிறுவனங்களுக்கு அழகிய பூட்டுகளை அனுப்பி வைக்கிறார் சேகுவேரா.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து அநேக சீர்த்திருத்தங்கள்,
அதற்கிடையே திடீர் திடீர் தலைமறைவு.
இதுதான் சேகுவேராவின் தொட்டில் பழக்கம்.
முதல் முறையாக அவர் தலைமறைவானபோது –
சேகுவேராவின் கதையை முடித்துவிட்டார் பிடல் காஸ்ட்ரோ என முதல் பக்க தலைப்புச் செய்திகள்.
மறுப்பார் பிடல்.
மீண்டும் வருவார் சேகுவேரா.
நாட்டின் எல்லையிலிருக்கும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களோடு அத்தனை நாளும் பணியாற்றிவிட்டு.
மறுபடியும் தலைமறைவு.
‘கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள்’ என அலறும் முதல் பக்கச் செய்திகள்.
மறுப்பார் பிடல்.
மீண்டும் வருவார் சேகுவேரா.
சுரங்கத் தொழிலாளர்களின் தோழனாகச் சில காலம் பணிபுரிந்து விட்டு.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
திடீரென ஒருநாள் மீண்டும் தலைமறைவு.
ஆனால் இந்த முறை தனது தோழன் பிடலுக்கு ஒரு நெஞ்சுருகும் மடல் ஒன்றை காணிக்கையாக்கிவிட்டு காணாமல் போகிறார்.
‘அயோக்கியர்களால் அல்லல் படும் இன்னொரு தேசத்திற்கு எனது தோள்கள் தேவைப்படுகிறதாம். எனவே பயணப்படுகிறேன். பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் நம் கியூப மக்களை.
வெற்றி நமதே’ என்கிறது அக்கடிதம்.
தொழில் அமைச்சர் பதவியோ,
தேசிய வங்கியின் தலைவர் பதவியோ எதுவுமே அவருக்குப் பொருட்டில்லை. விடுதலைக்கு ஏங்கும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்காக போராடுவதே அவர் நேசித்த பெரிய பதவி.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனது பதவி விலகல் கடிதங்களை பிடலுக்கு அனுப்பிவிட்டு மாறுவேடத்தில் அவர் பயணப்பட்ட மண்தான் பொலிவியா.
அங்குள்ள உழைக்கும் மக்களது உன்னதப் போராட்டத்தில் சேகுவேரா தன்னையும் இணைத்துக் கொள்ளும்போது…
நாட்காட்டி நவம்பர் 4, 1966 என்று அறிவிக்கிறது.
‘இங்குள்ள போராட்டக்காரர்களுக்கு எப்படித் தெரிந்தது இத்தனை வித்தைகள்’ என விவரம் புரியாமல் வியக்கிறது பொலிவிய அரசு.
ஆனால்
ஒன்று மட்டும் அதை உறுத்தலோடு
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
போராளிகளின் விதவிதமான தாக்குதல்கள் தொடரத்தொடர தலைசுற்றுகிறது பொலிவியப் படைகளுக்கு.
ஆனால்
ஒன்று மட்டும் அதை உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
அலறுகிறது அரசு தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல். உற்று நோக்கிக்கொண்டிருந்த அது அருகில் வந்து ஆறுதல் சொல்கிறது. அந்த அற்புதமான வீரனை வீழ்த்த ஆயுதமும் கொடுக்கிறது.
கியூபா மலைகளில் துவங்கிய யுத்தம் பொலிவியக் காடுகளில் தொடர்கிறது.
உறுத்தலோடு உற்று நோக்கிக் கொண்டிருந்த அது மெல்ல மெல்ல அந்த மாமனிதனை நெருங்குகிறது.
ஒரு அதிகாலைப் பொழுதில் பெரும்படையோடு அந்தப் புரட்சிக்காரன் ஆஸ்த்துமா தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த வேளையில் சுற்றிவளைத்துக் கைது செய்கிறது அது.
சேகுவேரா கைதான செய்தி எப்படியோ கசிந்துவிட… எட்டுத்திக்கும் செய்தி பறக்கிறது. அவரை விடுவிக்க கோரி மாபெரும் அறிஞர்களும், லட்சக்கணக்கான மக்களும் பங்கு கொண்ட பேரணி லண்டனில் நடக்கிறது.
‘சேகுவேராவை எதுவும் செய்துவிட வேண்டாம்’ என எழுந்த லட்சக்கணக்கானவர்களின் குரல்களை ஏளனம் செய்தபடி ‘அது’ தனது துப்பாக்கியின் திசையை சேகுவேராவை நோக்கி திருப்புகிறது.
துப்பாக்கியின் விசையை அழுத்தப்போகும் வேளையில்
‘ஒரு நிமிடம்…’ என்கிறார் சேகுவேரா.
சுடுவதை தாமதிக்கிறது அது.
இறந்து விடுவோம் என்பது உறுதியாகிவிட்ட வேளையில் அந்த இனியவனின் இதயத்திலிருந்து எழுந்த இறுதி வரிகள் இதுதான்…
“எனது தோழன் பிடலிடம் சொல்…
எனது மரணத்தால் புரட்சியை ஒருக்காலும் ஒடுக்கிவிட முடியாது என்று. அவரைத் தொடர்ந்து போராடச் சொல்.
என் மனைவி ஹில்டாவிடம் மறுமணம் செய்து கொள்ளச் சொல்.
உனது குறி சரியாக இல்லை நேராக எனது நெற்றியைக் குறி பார்.”
குரூரத்துடன் அது விசையைத் தட்டுகிறது.
அந்த மாவீரன் பொலிவிய மண்ணில் வீழ்கிறான்.
அப்போது நாட்காட்டி அக்டோபர் 9, 1967 என அறிவிக்கிறது.
எது அந்த ‘அது’?
உலக மக்களின் கூக்குரலை உதாசீனப்படுத்திய ‘அது’ எது?
அதுதான்: அமெரிக்கா.
மற்றும் அதனுடைய உளவுக்கும்பல்.
.......நன்றி ஐயா   பாமரன் 

Saturday

watergate Scandal

கால் ஃபேர்ன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட், இந்த இருவரையும் இன்றைய ஊடகவிலாளர்கள் மட்டும் அல்ல, செய்தித்துறை, எழுத்துத்துறை, பதிவுலகத்துறையில் இருக்கும் அனைவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
தமது பேனாமுனை என்ற ஆயுதத்தால் ஒரு மிகப்பெரிய வல்லரசின் தலைமை நாக்காலியையே சரித்துவிழுத்திய சரித்திர நாயகர்கள் இவர்கள்.
ஒரு உண்மையான செய்தியாளனின் பேனாமுனை சக்தி எத்தகையது, குற்றம் செய்தவர் நாட்டின் உச்ச பதவியில் இருக்கும் தலைவர் என்றாலும், அவர் செய்த குற்றம்கூட மறைக்கப்பட்டுவிடாமல், அதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, குற்றம் செய்தவர் உச்ச அரியணையில் இருந்தாலும் அவரை தூக்கி எறியும் சக்தி பேனாமுனைக்கு உண்டு என உலகிற்கு புடம்போட்டுக் காட்டியவர்கள் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர்.
அமெரிக்காவின் வரலாற்றிலேயே வோட்டர்கேட் ஊழல் மிக முக்கியமான ஒன்றாகும்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக 1968 முதல் 1974 வரை இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55 வயதில் 1968 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 1972 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த வேளையில் 1973ஆம் ஆண்டின் பிற்பகுதிகளில் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர் ஜனாதிபதி நிக்ஸன் மேல் குற்றம்சாட்டி, சில ஆதாரங்களுடன் அமெரிக்காவையே திடுக்கிடவைத்த செய்தி ஒன்றை வெளியிட்டார்கள். என்னதான் பெரிய ஜனநாயக நாடு என்றாலும் அந்த நாட்டின் தலைவர்மேல், ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தி ஒரு செய்தியை வெளியிடுவதாக இருந்தால் இந்த இரண்டுபேரும் எத்தனை நெருக்குவாரங்களை சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். இது குறித்து பின்னாளில் நிக்ஸனே தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார்.

சரி என்ன இந்த வோட்டர்கேட்? அப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியே பறிபோனமைக்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
நிக்ஸன் குடியரசுக் கட்சியை சார்ந்தவர், அப்போது எதிர்;க்கட்சியாக இருந்தது அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆகும். அந்த ஜனநாயக்கட்சியின் தலைமையகம் இருக்கும் மாளிகையின் பெயர்தான் வோட்டர் கேட்.
தேர்தல் வேளையில் இங்கு இந்த எதிர்க்கட்சியின் தலைமையகம் இருந்த வோட்டர்கேட் மாளிகையில் நிக்ஸனின் பணிப்பின் கீழ், மிக இரகசியமான முறையில், நவீன தொழிநுட்பமுடைய ஒலிப்பதிவு கருவிகளைப்பொருத்தி, அங்கு எதிர்கட்சியினரின் உரையாடல்களை, மற்றும் அவர்களின் செயற்திட்டங்களை, கள்ளத்தனமாக அறிந்துகொண்டு, அவர்களின் தேர்தல் விபரங்கள் பற்றி முற்றுமுழுதாக அறிந்துகொண்டு, தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பதே இந்த இரண்டு பத்திரிகையாளர்களாலும் சில ஆதாரங்களுடன் எழுதப்பட்ட திடுக்கிடவைத்த செய்தியாகும்.
இந்த விவகாரம் 1974இல் பூதாகரமானது, அவரது கட்சியினரே, எதிர்கட்சியுடன் சேர்ந்து நின்று இந்த மோசடிகுறித்து விவாதிக்கும் நிலை உருவாகியது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த மோசடிக்குற்றச்சாட்டை நிக்ஸன் மறுத்தேவந்தார். இருந்தாலும், நாளுக்கு நாள் ஆதாரங்கள் வலுப்பெறத்தொடங்கியதுடன் பிரச்சினை மிகப்பெரிய நிலைக்குச்சென்றது.
இந்த நிலையில் இதுகுறித்து பூர்வாங்க விசாரணைகளை நடத்தி அமெரிக்க செனட் குழு “நிக்ஸன் குற்றவாளி என்றும்” அவரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்க சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவரலாம் எனவும் ஆணையிட்டது.

பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "நான் குற்றவாளி" என்றும் ஒப்புக்கொண்டார்.

தான் குற்றவாளி என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, "நான் பதவியில் இருந்து இராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்" என்று அறிவித்தார்.
உண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள்.
நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

பதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். "பதவியை விட்டு நீங்களே விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்" என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.

குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக இராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
9.8.1974 அன்று அதிகாலை 6.30 மணிக்கு நிக்சன் தொலைக்காட்சியில் தோன்றி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு இராஜினாமா ஏற்கப்பட்டது.

நிக்ஸன் பதவி விலகியவுடன் அதற்கு காரணமாக இருந்த செய்தியார்களான கால் ஃபேன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட் அகியோரின் புகழ் எங்கும் பரவியது. அவர்கள் இருவரும் இணைந்து எழுதிய பல செய்திகள், புலனாய்வுச்செய்திகள், மற்றும் விபரணங்களை வாங்க பல நிறுவனங்கள் முண்டியடித்துக்கொண்டு நின்றன.
ஒரு விதத்தில் நிக்ஸனால் இவர்கள் இருவரும் பெரிய பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால் பாவம் நிக்ஸன் பதவி விலகியதன் பின்னர் கலிபோர்னியாவில் வசித்த அவரால் அரசாங்க வரியைக்கூட கட்டமுடியாமல் போனது.

மைக்ரோ பைனான்ஸ்

ஒருவர் உலகப்புகழ் பெற்ற யேல் பல்கலைகழகத்தில் எம்.ஏ பட்டம் பெறுகிறா. அதன்பின் யுனிவர்சிடி ஆஃப் சிகாகோவில் முனைவர் பட்டம் பெறுகிறார்.ஃபுல்ஃப்ரைட் ஸ்காலர் ஆக சிறப்பும் பெறுகிறார் என் வைத்துக்கொள்வோம்.அடுத்ததாக அவர் என்ன செய்வார்?

பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் 250K சம்பளம் வாங்கிக்கொண்டு யாட் ஒன்றை வாங்கிக்கொண்டு ஜாலியாக விடுமுறை எடுத்துக்கொண்டு காலத்தை கழிப்பார் என்று தான் நினைப்போம்.

ஆனால் விக்ரம் அகூலா அப்படி செய்யவில்லை.

பத்தாண்டுகள் மைக்ரோ பைனான்ஸ் துறையில் அனுபவம் பெற்றார். அதன்பின் நேராக இந்தியா வந்தார். எஸ்.கே.எஸ் மைக்ரோ பைனான்ஸ் எனும் கம்பனியை துவக்கினார். கம்பனியின் நோக்கம் கந்துவட்டியில் சிக்கி தவிக்கும் மிக வறுமையான பகுதிகளில் இருக்கும் அடித்தட்டு ஏழை பெண்களுக்கு கடனுதவியும், இன்சூரன்சும் அளிப்பது.

எஸ்.கே.எஸ் இன்று உலகின் அதிக வளர்ச்சி பெறும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனமாக மாறி உள்ளது.இதுவரை $72 மில்லியன்(280 கோடி) ரூபாய் கடனை 300,000 பெண்களுக்கு வழங்கி உள்ளது.ஓன வருடம் மட்டும் $50 மியன் கடனை வழங்கி உள்ளது.இந்தியாவின் மிக வறுமையான 11 மாநிலங்களில்(சட்டிஸ்கார்,ஜார்கண்ட், அந்திரா, ராஜஸ்தான்,ஒரிசா, ம.பி, உ.பி,,பீகார்) செயல்பட்டு வரும் இந்நிறுவனம் அடுத்த வருடம் 7 லட்சம் பயனாளிகளை இலக்காக வைத்திருக்கிறது.

பணக்காரர்களுக்கே கடன் தந்தால் பணம் திரும்ப வருவதில்லை.அப்படி இருக்க ஏழைகளுக்கு கடன் தந்தால் பணம் திரும்பி வரவா போகிறது என்று நினைக்கிறீர்களா?அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.விக்ரமின் நிறுவனத்தில் 98% கடன்கள் சொன்ன தேதியில் வசூலாகின்றனவாம்.

விக்ரமின் நிறுவனத்தில் கடனுதவி பெறுபவர்கள் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்கள்.அவர்களுக்கு சுமார் 5000 ரூபாய் அளவு கடனுதவி வழங்குகிறார் விக்ரம். கடன் பெறுபவ்ர்கள் அந்த கடனை ஆடு/கோழி வளர்த்தல், பழம்/காய்கறி வாங்கி விற்பது, மண்பானை செய்வது, கூடை முனைவது போன்றவற்றுக்கு பயன்படுத்துகிறார்களாம். ஆபத்துகாலங்களில் வட்டி இல்லாத கடன் கூட வழங்குகிறாராம் விக்ரம் அகூலா. அதுபோக கடனாளிகளுக்கு இன்சுரன்ஸ் வசதியும் செய்து தருகிறாராம். அதுபோக எஸ்.கே.எஸ் கல்விநிறுவனங்கள் மூலமாக பள்ளியிலிருந்து பாதியில் நின்ற பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியும் அளிக்கப்படுகிறதாம்.

இவரது சேவையை பாராட்டி டைம் பத்திரிக்கை இவரை "புதிய உலகை உருவாக்கும் நூறு சிற்பிகளுல் ஒருவர்" என்று கவ்ரவ்திருக்கிறது.

காசு,பணம், வசதி,ஆடம்பரம் என அனைத்தும் நிரம்பிய வாழ்வை உதறி விட்டு "நாடென்ன செய்தது எனக்கு?" என கேட்காமல் 'நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?" என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டதால் தான் கிட்டத்தட்ட 7 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு சொர்க்க வாசலை திறக்க விக்ரம் அகூலாவால் முடிந்திருக்கிறது.

திரானியற்ற இன்னொரு தமிழன்


வானம்
வெறித்து அமர்ந்திருந்தாள்
கிழவி.

ஒட்டிய வயிறும்
கிழிந்த உடையுமென
மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது
ஓர் பிள்ளை

சப்பத்து சப்தம்
கேட்டு நடுநடுங்கி விழுந்தான்
இளையவன்

தூரத்தில் எங்கோ
கேட்டது இன்று
கண்ணில் பட்டவளின்
கதறல்

மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த
புத்தனின் அன்னம்
சுட்டு வீழத்தப்பட்டது
உளவு குற்றம் சுமத்தி

துப்பாக்கி வாசத்தோடு
வந்தவர்கள் புத்தனின்
காதில் ஓதினார்கள்
யாவரும் நலமென்று

புத்தனும் புன்னகையோடு
கேட்டு தலையாட்டினான்
அன்னம் திரும்பாததன்
பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று

- ப்ரியன்.

வரதட்சணை

மஹர் Vs வரதட்சணை

பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமண கொடைகளை) மகிழ்வோடு வழங்கி விடுங்கள். (அல்குர்ஆன் 4:4)

….ஒரு (பொற்)குவியலையே (மஹராக) நீங்கள் அவர்களுக்குக் கொடுத்திருந்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது….. (அல்குர்ஆன் 4:20)

மஹர் எனும் மணக்கொடையை உங்கள் மனைவியருக்கு மகிழ்வோடு வழங்கிவிடுங்கள் என்று இறைவன் கூறியிருக்க, இன்று இறைவனின் கட்டளைக்கு எதிராக, பெண்வீட்டாரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களைக் காட்டி பணமாகவும், பண்டமாகவும், நகையாகவும், விருந்தாகவும், பொருட்களாகவும், துணிகளாகவும், நிலம் மற்றும் வீடுகளாகவும் வரதட்சணை வாங்குவதை பார்க்கிறோம். இதில் சிலர் உங்கள் பெண்ணுக்கு, போடுவதை போடுங்கள்…..உங்கள் பெண்ணுக்கு போடுவதை போடாமலா இருப்பீர்கள்…? என பொடிவைத்து மறைமுகமாக வரதட்சணை எனும் தூண்டிலை, முதலில் போட்டுவிடுகின்றனர்.

ஊர் வழக்கம் மற்றும் சடங்கு சம்பிரதாயப்படி கொடுத்தனுப்பவில்லை எனில் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்கள் அல்லது தம் பெண்ணை நிம்மதியாக வாழவிடாமல் குத்திக் காட்டுவார்கள் என்ற பயத்தில், பெண் வீட்டார்கள் பொருட்களை கொடுத்தனுப்புகின்றார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, பெண் வீட்டாரிடம் கேட்டுப் பெறுவதுதான் வரதட்சணை, அவர்களாக தந்தால் தவறேதுமில்லை, பெற்றுக்கொள்ளலாம் என சிலர் கூறுகின்றனர்.

இப்படி கொடுத்துப் பழக்கப் படுத்தியிருப்பதால்தான் மணமுடிக்க முடியாத முதிர்கன்னிகளின் எண்ணிக்கை, சமுதாயப் பந்தலில் அதிகமாக படர்ந்து விட்டது. அவர்கள் “வடிக்கும் கண்ணீருக்கும்… வெடிக்கும் பெருமூச்சுக்கும்…. அவர்தம் பெற்றோர்களின் மன உலைச்சலுக்கும்…” இவையே காரணமாக இருப்பதால், இத்தகைய “தீய முன்மாதிரியை” தவிர்ந்துக் கொள்வதே சிறந்ததாகும்.

நாள், சட்சத்திரம், ஜாதகம் இல்லை

எவர் ஜோதிடனிடம் (எதிர்காலத்தையும், மறைவான விஷயத்தையும் கணிப்பவனிடம்) வந்து, அவன் கூறுபவற்றை (கேட்டு) உண்மைப்படுத்துவாரோ, அவர் முஹம்மது(ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டார், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஹுரைரா(ரலி), நூல்: அபூதாவுத்

அன்பளிப்பு அல்லது மொய்

ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ், அவருக்கு வழங்கிய பாக்கியமாகும், என நபி(ஸல்) கூறினார்கள்.

காலித் பின் அதீ(ரலி), நூல்: அஹ்மத்

அன்பளிப்பு செய்துவிட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன், வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவன் போன்றவனாவான் என நபி(ஸல்) கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

வலிமா விருந்து

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலிமா (திருமண) உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும். அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

தம்பதியரின் கடமைகள்

நல்ல குணம் கொண்டவர்களே, ஈமானில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே. அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சுவனத்தில் நுழைவாள்.

உம்மு ஸலமா(ரலி), நூல்: இப்னுமாஜா

மணமக்களை வாழ்த்துதல்

நபி(ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்”

அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும் என்று கூறுவார்கள்.

அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத்

எச்சரிக்கை

எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, (அல்லாஹ்வாகிய) அவன் (விதித்துள்ள) வரம்புகளை மீறி விடுகின்றாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் நரகில் புகுத்துவான். அதில் அவர் நிரந்தரமாக தங்கிவிடுவார் அவருக்கு இழிவான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 4:14)

புத்தகம்

இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை; நேரமில்லை என்பதாலோ படிக்குமளவு முக்கியமானவை இல்லை என்பதாலோ இல்லை, மனத்தளவில் படிப்பதில் ஈடுபாடு குறைந்திருக்கிறது. இது அவ்வப்போது நேரும் என்றாலும் ஓராண்டுக்கும் மேலாக இப்படி இருக்கிறது. இந்த நிலை ஆரம்பமாகும் முந்தைய வாரம் என் நண்பர் ஒரு மாதத்தில் எவ்வளவு படிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சுமாராகப் பத்து நூல்கள் என்று சொல்லியிருக்கிறேன். சுவாசத்திற்கு அடுத்து நான் உயிருடன் இருக்க, படிப்பது எனக்கு அவ்வளவு அவசியமான ஒன்று.

இது நிஜம். வருத்தம் வலி மட்டுமல்ல, ஒரு சுகம். அழுதால்தான் பால் கிடைக்கும் என்று கற்றுக்கொண்ட குழந்தை பசியால் கூட அழுவதில்லை, யாரும் தன்னைக் கொஞ்சவில்லையே என்றும் அழும். இந்த அனிச்சை கவனஈர்ப்பு காலந்தோறும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படும். மௌன அழுகைகூட ஒரு நிழல் விரல் துடைக்காதா என்றுதான். இதன் முதல் கட்டம் மனம், என்னால் முடியாது என்று தன்னிடமே சொல்லிக்கொள்வது. இந்த அவலம் அசிங்கமானதோ அருவருப்பானதோ அல்ல, இயல்பானது. உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.

யாயும் ஞாயும்

"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே."
(குறுந்தொகை:40)

'இந்தச் செம்புலப்பெயல் நீர் போல' உவமையை சிலாகித்து, அதற்கு வெவ்வேறான விளக்கங்கள் கூறி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள்! அதனால், மற்ற வரிகள் கிளர்த்தும் தொடர்பான சிந்தனைகளில் மனம் போய்விட்டது..
இந்த அற்புதமான பாடலை எழுதிய புலவரின் பெயர் கூட அறிய முடியாமல் நேரிட்டதால், அவர் பெயரையே "செம்புலப்பெயனீரார்" என்று வழங்கும் படி ஆயிற்று!

உதிர்தல்

சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...

அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்
ஏற்கப்படாத பிரியங்களும்
எங்கோ கைவிடப்பட்டு
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
பின் என்னாகுமென்று...

ஒவ்வொரு காலையிலும்
தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக் கொள்ளும்
இந்த மரங்களைப் பார்க்கையில்
தோன்றுகிறது

உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன..

சில நேரங்களில்
கவிதைகளாகவும்.

"என் பெயரோ
அவள் பெயரோ
எங்கள் பெயர்களோ அற்று
இருக்கும்
இந்தக் கவிதையில்
எங்கேயாவது
காதல் பிடிபடலாம்
அப்போது நீங்கள்
கண்ணீர் சிந்தலாம்.
காறி உமிழலாம்.
கனத்த மனதோடு சிரிக்கலாம்.
அது
எங்கள் காதல் என்பதை மறந்து.."

- கார்க்கி