Sunday

Apple Vs Pear

உடல் பருமனடைதலால் பெண்களின் புத்திக்கூர்மைக்கும் மூளையின் தொழிற்பாட்டிற்கும் தீங்கு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உடல் பருமனை வைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் அறிவாற்றலைக் கணிக்கலாம். வயது முதிர்ந்த பெண்களின் உடல் நிறை கூடிக்கொண்டு செல்லச் செல்ல அவர்களது ஞாபகசக்தியைப் பேணும் தன்மையும் புத்திகூர்மையும் புலன் உணர்வு தன்மையும் குறைந்து போகின்றது என்று அமெரிக்காவில் ஒரு புதிய ஆய்வில் வெளியாகி உள்ளது.
தோற்றத்தின் அடிப்படையில் உடல் பருமன் கணக்கீடு இடைப்பகுதிக்கு கீழே எடை அதிகமாயின் பேரி உருவம் (Pear shape) எனவும், இடைப்பகுதிக்கு மேலே அதிகமாயின் ஆப்பிள் வடிவம் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

பேரி வடிவ உடல் பருமன் உடையோருக்கு ஆப்பிள் வடிவத்தோரை விட மூளையின் செயல்திறன் குறைவடைந்து செல்வதை அவதானித்தார்கள். வழமையான தீங்குகளான புற்றுநோய், நீரிழிவு நோய், இதயநோய், குருதிக்குழாய் நோய் என்பவற்றுடன் மூளையின் செயற்பாடும் குறைவதை இடையின் கீழே கொழுப்புப் படிந்து, எடை அதிகமாகி உள்ள பேரி வடிவ பெண்களில் காணக்கூடியதாக இருந்தது.

ஆராய்வில் 65க்கும் 79க்கும் இடைப்பட்ட 8745 எண்ணிக்கையிலான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களிடம் மூளையின் செயற்பாட்டை அவதானிக்க சில அறிவாற்றற் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொருவரதும் உடற் நிறைச் குறியீட்டெண் (உநிகு - BMI) கணிப்பிடப்பட்டன. மூன்றில் இரண்டு பகுதிக்கு மேலானவர்களுக்கு அதிக எடையாகவோ அல்லது உடல் பருமனாகியோ காணப்பட்டது. உநிகு ஒரு புள்ளியால் அதிகரிக்க புத்திக்கூர்மை ஒரு புள்ளியால் குறைவடைந்ததை அவதானித்தார்கள். இவர்களுள் பேரி வடிவ பெண்கள் மேலும் மோசமாக புத்திக்கூர்மை இழப்பதையும் அவதானித்தார்கள்.

இவை உடலில் கொழுப்புப் படியும் இடத்திற்கேற்ப உடல் தொழிற்பாடு மாறுபடுவதைக் காட்டினாலும், இதற்கும் மூளையின் செயற்பாட்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அறிய மேலும் ஆராய்வுகள் தேவை எனக்கூறப்படுகிறது.

No comments: