Sunday

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த ஆலோசனை : ஆவணம் ஏதும் இல்லாத அதிசயம்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த ஆலோசனை : ஆவணம் ஏதும் இல்லாத அதிசயம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராஜாவுடன், அட்டர்னி ஜெனரல் வாகனவாதி ஆலோசனை நடத்தினார். இருப்பினும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான ஆவணம் இல்லை என்று தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ், எஸ்.சி.அகர்வால் என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விஷயங்கள் குறித்து, கடந்த 2007ம் ஆண்டு, டிசம்பர் முதல் வாரத்தில், மத்திய வெளியுறவு அமைச்சராக அன்று இருந்த பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை.நடத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தொலைதொடர்பு விவகார தீர்ப்பாயத்தில், மொபைல்போன் ஆபரேட்டர்கள் சங்கம் வழக்கு தொடுத்து இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, தொலைதொடர்பு அமைச்சராக இருந்த ராஜாவும் உடன் இருந்தார். 15 நிமிடம் நடந்த ஆலோசனையில், மொபைல்போன் ஆபரேட்டர்களின் கருத்துக்கள் பிரணாபிடம் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், இந்த சந்திப்பு தொடர்பாக குறிப்பு எதுவும் எடுக்கப்படவில்லை. எழுத்துப்பூர்வமாக எவ்வித ஆலோசனையும் வழங்கப்படவில்லை. இந்த சந்திப்புக்கு பின் அறிக்கை தயாரிக்கப்பட்டு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிரதியை தொலைதொடர்பு அமைச்சகம் வைத்திருக்கவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்க வேண்டாம். சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த சந்திப்பை ராஜா தனது முடிவுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்த சந்திப்பை தவறாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைதொடர்பு அமைச்சராக இருந்த ராஜா, கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சொலிசிட்டர் ஜெனரல் வாகனவாதியுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை உடனடியாக மேற்கொள்ளும்படி ஆலோசனை வழங்கினர்' என்று குறிப்பிட்டு இருந்தார். உண்மையில் அந்த மாதிரி ஆலோசனை வழங்கப்படவில்லை. இவ்வாறு அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்லுக்கு நோட்டீஸ் : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைதொடர்பு நிறுவனங்களில், குறிப்பிட்ட காலத்திற்குள் தொலைதொடர்பு சேவையை துவங்காத ஏர்டெல், டி.பி.ரியாலிட்டி சிஸ்டிமா ஷியாம் டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு லைசென்சை ரத்து செய்வது தொடர்பாக தொலைதொடர்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமலர்

No comments: