Saturday

புத்தகம்

இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை; நேரமில்லை என்பதாலோ படிக்குமளவு முக்கியமானவை இல்லை என்பதாலோ இல்லை, மனத்தளவில் படிப்பதில் ஈடுபாடு குறைந்திருக்கிறது. இது அவ்வப்போது நேரும் என்றாலும் ஓராண்டுக்கும் மேலாக இப்படி இருக்கிறது. இந்த நிலை ஆரம்பமாகும் முந்தைய வாரம் என் நண்பர் ஒரு மாதத்தில் எவ்வளவு படிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சுமாராகப் பத்து நூல்கள் என்று சொல்லியிருக்கிறேன். சுவாசத்திற்கு அடுத்து நான் உயிருடன் இருக்க, படிப்பது எனக்கு அவ்வளவு அவசியமான ஒன்று.

இது நிஜம். வருத்தம் வலி மட்டுமல்ல, ஒரு சுகம். அழுதால்தான் பால் கிடைக்கும் என்று கற்றுக்கொண்ட குழந்தை பசியால் கூட அழுவதில்லை, யாரும் தன்னைக் கொஞ்சவில்லையே என்றும் அழும். இந்த அனிச்சை கவனஈர்ப்பு காலந்தோறும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படும். மௌன அழுகைகூட ஒரு நிழல் விரல் துடைக்காதா என்றுதான். இதன் முதல் கட்டம் மனம், என்னால் முடியாது என்று தன்னிடமே சொல்லிக்கொள்வது. இந்த அவலம் அசிங்கமானதோ அருவருப்பானதோ அல்ல, இயல்பானது. உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.

No comments: