Saturday

watergate Scandal

கால் ஃபேர்ன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட், இந்த இருவரையும் இன்றைய ஊடகவிலாளர்கள் மட்டும் அல்ல, செய்தித்துறை, எழுத்துத்துறை, பதிவுலகத்துறையில் இருக்கும் அனைவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
தமது பேனாமுனை என்ற ஆயுதத்தால் ஒரு மிகப்பெரிய வல்லரசின் தலைமை நாக்காலியையே சரித்துவிழுத்திய சரித்திர நாயகர்கள் இவர்கள்.
ஒரு உண்மையான செய்தியாளனின் பேனாமுனை சக்தி எத்தகையது, குற்றம் செய்தவர் நாட்டின் உச்ச பதவியில் இருக்கும் தலைவர் என்றாலும், அவர் செய்த குற்றம்கூட மறைக்கப்பட்டுவிடாமல், அதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, குற்றம் செய்தவர் உச்ச அரியணையில் இருந்தாலும் அவரை தூக்கி எறியும் சக்தி பேனாமுனைக்கு உண்டு என உலகிற்கு புடம்போட்டுக் காட்டியவர்கள் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர்.
அமெரிக்காவின் வரலாற்றிலேயே வோட்டர்கேட் ஊழல் மிக முக்கியமான ஒன்றாகும்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக 1968 முதல் 1974 வரை இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55 வயதில் 1968 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 1972 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த வேளையில் 1973ஆம் ஆண்டின் பிற்பகுதிகளில் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர் ஜனாதிபதி நிக்ஸன் மேல் குற்றம்சாட்டி, சில ஆதாரங்களுடன் அமெரிக்காவையே திடுக்கிடவைத்த செய்தி ஒன்றை வெளியிட்டார்கள். என்னதான் பெரிய ஜனநாயக நாடு என்றாலும் அந்த நாட்டின் தலைவர்மேல், ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தி ஒரு செய்தியை வெளியிடுவதாக இருந்தால் இந்த இரண்டுபேரும் எத்தனை நெருக்குவாரங்களை சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். இது குறித்து பின்னாளில் நிக்ஸனே தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார்.

சரி என்ன இந்த வோட்டர்கேட்? அப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியே பறிபோனமைக்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
நிக்ஸன் குடியரசுக் கட்சியை சார்ந்தவர், அப்போது எதிர்;க்கட்சியாக இருந்தது அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆகும். அந்த ஜனநாயக்கட்சியின் தலைமையகம் இருக்கும் மாளிகையின் பெயர்தான் வோட்டர் கேட்.
தேர்தல் வேளையில் இங்கு இந்த எதிர்க்கட்சியின் தலைமையகம் இருந்த வோட்டர்கேட் மாளிகையில் நிக்ஸனின் பணிப்பின் கீழ், மிக இரகசியமான முறையில், நவீன தொழிநுட்பமுடைய ஒலிப்பதிவு கருவிகளைப்பொருத்தி, அங்கு எதிர்கட்சியினரின் உரையாடல்களை, மற்றும் அவர்களின் செயற்திட்டங்களை, கள்ளத்தனமாக அறிந்துகொண்டு, அவர்களின் தேர்தல் விபரங்கள் பற்றி முற்றுமுழுதாக அறிந்துகொண்டு, தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பதே இந்த இரண்டு பத்திரிகையாளர்களாலும் சில ஆதாரங்களுடன் எழுதப்பட்ட திடுக்கிடவைத்த செய்தியாகும்.
இந்த விவகாரம் 1974இல் பூதாகரமானது, அவரது கட்சியினரே, எதிர்கட்சியுடன் சேர்ந்து நின்று இந்த மோசடிகுறித்து விவாதிக்கும் நிலை உருவாகியது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த மோசடிக்குற்றச்சாட்டை நிக்ஸன் மறுத்தேவந்தார். இருந்தாலும், நாளுக்கு நாள் ஆதாரங்கள் வலுப்பெறத்தொடங்கியதுடன் பிரச்சினை மிகப்பெரிய நிலைக்குச்சென்றது.
இந்த நிலையில் இதுகுறித்து பூர்வாங்க விசாரணைகளை நடத்தி அமெரிக்க செனட் குழு “நிக்ஸன் குற்றவாளி என்றும்” அவரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்க சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவரலாம் எனவும் ஆணையிட்டது.

பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "நான் குற்றவாளி" என்றும் ஒப்புக்கொண்டார்.

தான் குற்றவாளி என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, "நான் பதவியில் இருந்து இராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்" என்று அறிவித்தார்.
உண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள்.
நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

பதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். "பதவியை விட்டு நீங்களே விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்" என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.

குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக இராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
9.8.1974 அன்று அதிகாலை 6.30 மணிக்கு நிக்சன் தொலைக்காட்சியில் தோன்றி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு இராஜினாமா ஏற்கப்பட்டது.

நிக்ஸன் பதவி விலகியவுடன் அதற்கு காரணமாக இருந்த செய்தியார்களான கால் ஃபேன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட் அகியோரின் புகழ் எங்கும் பரவியது. அவர்கள் இருவரும் இணைந்து எழுதிய பல செய்திகள், புலனாய்வுச்செய்திகள், மற்றும் விபரணங்களை வாங்க பல நிறுவனங்கள் முண்டியடித்துக்கொண்டு நின்றன.
ஒரு விதத்தில் நிக்ஸனால் இவர்கள் இருவரும் பெரிய பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால் பாவம் நிக்ஸன் பதவி விலகியதன் பின்னர் கலிபோர்னியாவில் வசித்த அவரால் அரசாங்க வரியைக்கூட கட்டமுடியாமல் போனது.

No comments: