Friday

தமிழர்களின் வரலாறு தொடர்ச்சி

சரியான திசையில் பயணிக்க வேண்டிய இலங்கையின் சமூகப், பொருளாதார வளர்வு நிலைகள் விடுதலைக்குப் பின்னர் S.W.R.D பண்டாரநாயகாவின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்கிற ஒரு முறையற்ற செயல் திட்ட முன்வரைவால் தனது அழிவை நோக்கித் திரும்பியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, அடிப்படைக் கல்வியை தமிழில் கற்ற தமிழர்களின் நிலையும், அவர்களின் வேலை வாய்ப்புகளுக்கான நிலைத் தன்மையும் இதனால் கேள்விக்குறியாகியது,தமிழர் பகுதிகளின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப் பட்டது, பாதுகாப்புப் பணிகளில், படையணிகளில் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர், 1958 இல் தமிழ் மக்களின் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளும், அரசியல் பின்புலமும் தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி, இலங்கையில் வாழும் தமிழர்கள், இலங்கையின் அதிகாரப் பூர்வக் குடிமக்களா என்கிற அளவில் வந்து நின்றது.

இதனிடையே, 1972 இல் குடியரசுச் சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மேற்கண்ட கேள்விகளை அரசாட்சி முறையாகவே சிங்கள பெரும்பான்மை அரசு முன்னெடுத்தது. 1950 இல் இருந்து தொடங்கிய சிங்களப் பேரினவாத அரசின் ஒருதலைப் பட்சமான போக்கினை எதிர்க்கும் முகமாக ஒரு எதிர்வினையாக திரு.சி.சுந்தரலிங்கனார் தலைமையில் "ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி" என்கிற அமைப்பு உருவாகி, தமிழர்களுக்கான "சுயாட்சி" என்கிற கொள்கை அவரால் முன்வைக்கப் படுகிறது. இதற்கு முன்னரே 1918 இல் திரு.விஸ்வலிங்கம் என்பவர் தனித்தமிழ் நாட்டின் கோரிக்கையை ஆங்கில அரசிடம் வைத்ததும், 1924 இல் திரு.பொன்னம்பலம் ராமநாதன் உருவாக்கிய தமிழர்களுக்கான ஒரு தனி அரசியல் பார்வையும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திரு.சுந்தரலிங்கனார் அவர்களே " தமிழீழம்" என்கிற ஒரு குறியீட்டு அடையாளத்திற்கான காரணியாகவும், தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போரை முதன் முதலாகத் துவக்கியவறுமாவார். பிற்காலத்தில் இவர் " வன்னிச் சிங்கம்" என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டார்.1972 இல், இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா ஒருதலைப்பட்சமாக உருவாக்கிய ஓட்டுப் பொறுக்கி அரசியல் தந்திரத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட முன்வரைவுகளே இலங்கையில் வாழும் தமிழ் மக்களை ஒரு கடும் சமூகப், பொருளாதார நெருக்கடிகளை நோக்கித் தள்ளியது. போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழலை அவர்களுக்கு உருவாக்கியது.

No comments: