Friday

தமிழர்களின் வரலாறு

இந்தக் கேள்விக்கான சரியான விடை நமக்குத் தெரிய வருமேயானால், இலங்கையில் நடக்கின்ற ஒரு இன விடுதலைப் போராட்ட வரலாற்றின் முழுமையான சாரம் நமக்குக் கிடைக்கும்.

இந்தக் கேள்விக்கான விடையை நோக்கிப் பயணப்படும்போது இலங்கையின் ஆதியான வரலாறு நமக்குத் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது, ஆனால், அந்த வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவது இன்றைய சூழலில் ஒரு தேவையற்றதானதாகவும், எரிகின்ற வீட்டில் எத்தனை ஓடுகள் இருந்தன, அந்த வீட்டை யார் கட்டியது போன்ற பயனற்ற ஆயவுகளாகவே இருக்கும். இருப்பினும், இலங்கையின் ஒரு குறைந்தபட்ச வரலாறு நாம் அறிந்து கொள்ள வேண்டியதே.

போர்த்துக்கீசியர்கள் 1505 ஆம் ஆண்டு வணிக நோக்கில் இலங்கையில் நுழைகிறார்கள், அந்த நேரத்தில் இலங்கையில் மூன்று நிலப்பரப்பு சார்ந்த அரசுகள் இருந்தன, அவை முறையே, கோட்டை அரசு, கண்டி அரசு மற்றும் யாழரசு (சீதாவாக்கை), இவற்றில் முதலிரண்டும், சிங்கள அரசுகளாகவும், கடைசி தமிழ் அரசாகவும் இருந்தது. தொடர்ந்த பல்வேறு சூழியல் காரணிகள் மற்றும் வாழ்வியல் பயணங்களைச் சந்தித்த இலங்கை, 1802 இல் ஆங்கிலக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டபோது ஆமியன்ஸ் (Amiens Agreement) ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட இலங்கையின் வரைபடங்கள் இந்த மூன்று அரசுகளையும் தனித்தனியே சுட்டிக் காட்டுகிறது.

இதற்கு முன்னர் கிலேகான் (SIR.HUGH CLEGHORN) ஒரு தனிப்பட்ட வரலாற்றுக் குறிப்பை ஆங்கில அரசுக்குக் கொடுக்கிறார், அதில் தெளிவாக பண்டைக் காலம் தொட்டு இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்பதையும், சிங்களஇனம், மொழி, கலாச்சாரம் தமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரக் கூறுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது என்றும் ஒரு வரைவை, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் அளிக்கிறார். பின்னர் படிப்படியாக மூன்று வெவ்வேறான அரசுகளுமே ஆங்கில ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது என்பதும், நிர்வாக வசதிகளுக்காக, ஆட்சி முறைமைகளுக்காக ஆங்கில அரசு வழமை போல (அதாவது இந்தியாவில் நடந்ததைப் போலவே) இலங்கைத் தீவு முழுதையுமே ஒரே கட்டுக்குள் கொண்டு வந்தது, 1948 இல் இலங்கை ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைகிறது. இது ஒரு சுருக்கமான இலங்கையின் விடுதலைக்கு முந்தைய வரலாறு.

No comments: